நொச்சி, ஆடாதொடா வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் நொச்சி மற்றும் ஆடாதொடா போன்றவை அதிகளவு பயிர் செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக, உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களான நொச்சி மற்றும் ஆடாதொடா பயிரிட நாற்று வழங்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது.இதை தொடர்ந்து, இரண்டு பயிர்களும் சேர்த்து, 10,800 நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்க இருப்பு உள்ளது. ஒரு விவசாயிக்கு, 50 நாற்றுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் கூறியதாவது:ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து, நொச்சி மற்றும் ஆடாதொடா போன்ற இயற்கை பூச்சி விரட்டி பயன்பாடுகளை நடைமுறைக்கு விவசாயிகள் கொண்டு வர வேண்டும். இதை பயன்படுத்துவதன் வாயிலாக, பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலை முன்கூட்டியே கட்டுப்படுத்தலாம். சாகுபடி செலவினங்களை குறைத்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும்.ஆடாதொடாவின் இலைகள் கசப்பு தன்மை கொண்டிருப்பதால், சிறந்த பூச்சி விரட்டியாக சேமிப்பு கிடங்கு மற்றும் வயல் வெளியிலும் பயன்படுத்தலாம்.ஆடாதொடா, நொச்சி இலைகளை ஐந்து கிலோ எடுத்து கூழாக்கி அதை, 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து, வடித்து பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட்ட பயிர்கள் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும், இவை பயிர் விளைச்சலை பெருக்குவதுடன், வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல்படுகிறது.இவ்வாறு, கூறினர்.