யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கிணற்றுப் பாசனம் மற்றும் மானா வாரியாக பயிர் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாச பாளையம் விவசாயிகள் கூறுகையில், 'தற்போது அன்னூர் வட்டாரத்தில் மூன்று முறை மழை பெய்துள்ளது. மழை பெய்துள்ள சமயத்தில் யூரியா உரம் இட்டால் மண்ணில் தழைச்சத்துக் கூடும். பயிர்களும் நல்ல விளைச்சல் தரும். ஆனால் கடைகளில் யூரியா உரம் குறைந்த அளவே தருகின்றனர். தேவையான அளவு தருவதில்லை. மேலும் யூரியா உரம் வாங்கும் போது டி.ஏ.பி., சல்பேட் அல்லது வேறு உரம் வாங்க வேண்டும் என உரக்கடைகளில் நிர்பந்தம் செய்கின்றனர் இதனால் 50 கிலோ யூரியா மூட்டை 296 ரூபாய்க்கு வாங்குவதற்காக 1800 ரூபாய் கொடுத்து வேறு உரங்களையும் வாங்க வேண்டி உள்ளது. மேலும் சில உரக் கடைகளில் யூரியா இருப்பு எவ்வளவு உள்ளது என்னும் பட்டியல் வைக்கப்படுவதில்லை,' என்றனர்.