கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
கோவை; 'விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன், கலெக்டரிடம் கொடுத்த மனு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு செய்து, தற்போது நில அளவை செய்து, அடையாள கற்களை நட்டு வருகிறது. தனியார் ஏஜன்சியினர் ட்ரோன் வாயிலாக, நிலங்களை அளந்து அடையாளப்படுத்தி, 'மார்க்கிங்' செய்து வருகின்றனர். கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தால் ஏழை, நடுத்தர, சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாவர். கோவை மேற்குப்பகுதியில் பல ஆயிரம் விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாய கூலிகளாக மாறும் நிலை ஏற்படும். விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.