உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தடுக்க விவசாயிகள் கோரிக்கை

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தடுக்க விவசாயிகள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்று, தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் பழனிசாமி அளித்த மனு: வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில், சராசரி அளவைவிட கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே, நிலத்தடி நீர்மட்டம், நீர்நிலைகள் உயரவும், நீர்வழிப்பாதைகளை பாதுகாக்கவும் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டும். நீர்வரத்து இல்லாமல் உள்ள குளம், குட்டைகள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழையால் தென்னை, வாழை, மஞ்சள், தக்காளி, சிறுதானியங்கள் உற்பத்தியாகும் விளைநிலங்களில், பார்த்தீனிய செடிகள் விவசாய உற்பத்தியை பாதிக்கிறது. இந்த விஷச்செடியை, முற்றிலும் ஒழிக்க, வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராவல் மண், செம்மண் கடத்தலை தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பால் மற்றும் உப பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதிப்பதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தீவனம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், பாலுக்கான கொள்முதல் விலை பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு, பால் இறக்குமதியை தடை செய்து, உள்நாட்டு விற்பனை சந்தையை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'நொய்யல் ஆற்றில்

சாய கழிவு கலப்பு'

இதர விவசாயிகள் தங்கள் மனுவில், 'மாவட்ட தோட்டக்கலை துறை செயல்பாடுகள் சரியில்லை; கவனக்குறைவாக நடந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்லாறு பழ பண்ணையை, கோவை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், செல்வபுரம் பகுதி யில் சாய கழிவு, நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி கோதவாடி பகுதியில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !