மூங்கில் -குட்டைக்கு அத்திக்கடவு தண்ணீர்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு கலெக்டரிடம் விவசாயிகள் மனு
மேட்டுப்பாளையம்; அத்திக்கடவு - -- அவிநாசி திட்ட தண்ணீர் குழாயை, மூங்கில் குட்டைக்கு விரிவாக்கம் செய்ய குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என, விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், நடைபெறும் கலைஞர் கனவு இல்ல வீடுகள், கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வந்தார். அவரிடம் ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதி குமரேசன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர். அதில் பெள்ளாதி குளத்திற்கு, அத்திக்கடவு --- அவிநாசி திட்டத்தில் தண்ணீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. பெள்ளாதி குளத்தில் இருந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் மொங்கம்பாளையத்தில், 18 ஏக்கர் நிலப்பரப்பில் மூங்கில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு மழை நீர் வழித்தடங்கள் இல்லாததால், எப்போதும் வறண்டே காணப்படுகிறது. பெள்ளாதி குளத்தில் உள்ள அத்திக்கடவு --அவிநாசி திட்ட குழாயில் இருந்து, மூங்கில் குட்டைக்கு குழாய் அமைத்து, தண்ணீர் வழங்க ஆவன செய்ய வேண்டும். இதனால் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு உள்ள விவசாயக் கிணறுகளுக்கு, நீரூற்று தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர். மனுவைப் பெற்ற மாவட்ட கலெக்டர் பவன்குமார், பெள்ளாதி குளத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள், எம்.எல்.ஏ., செல்வராஜிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.