சாகுபடி பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள் போராட தயாராகும் விவசாயிகள்
உடுமலை; காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளால், சாகுபடி பயிர்கள் பாதிக்கும் நிலையில், வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. அதிலும், காட்டுப்பன்றிகள், வன விலங்காக இல்லாமல், வன எல்லை கிராமங்கள் மட்டுமன்றி, 40 கி.மீ.,துாரம் வரை அமைந்துள்ள கிராமங்கள் வரை பரவியுள்ளன.கிராமங்களிலுள்ள ஓடை, புதர்களில் கூட்டம், கூட்டமாக வசித்து வரும் அவை, மக்காச்சோளம், வாழை, தென்னை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு, விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களையும் முட்டி தாக்குகின்றன.காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இருப்பினும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.அதே போல், வன எல்லை கிராமங்களில், நுாற்றுக்கணக்கான குரங்குகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தியும், தென்னையிருந்து இளநீர் பறித்து, வீணாக்கி வருகின்றன.இது குறித்து, புகார் தெரிவிக்கவும், தீர்வு காணவும், ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி, மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. ஒரு சில மாதங்கள் பெயரளவிற்கு மட்டும் நடத்திய நிலையில், தற்போது கூட்டம் நடத்தப்படுவதில்லை.விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வனத்துறையினர் முன் வராததால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.உடுமலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: வன எல்லை கிராமங்களான, தேவனுார்புதுார், ராவணாபுரம், கரட்டூர், வலையபாளையம், திருமூர்த்திநகர், பொன்னாலம்மன் சோலை உள்ளிட்ட பகுதிகளில், காட்டுப்பன்றி, யானை மற்றும் குரங்குகளால் பயிர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.பயிர்கள் சேதமடைவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. விவசாயிகள் புகார் தெரிவித்தாலும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையோ, உரிய இழப்பீடு வழங்கவோ அதிகாரிகள் முன் வருவதில்லை.வன எல்லையிலுள்ள தோட்டத்துசாளைகள், வீடுகளில் வசிப்போர், தங்களையும், பயிர்களையும் காப்பாற்ற, நாய்கள் வளர்த்து காட்டுப்பன்றிகளை விரட்டினால், வனத்துறை வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கின்றனர். காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு பெரும்பாதிப்புகள் தொடர்ந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில், வனத்துறை மிரட்டல் காரணமாக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மாதம் தோறும், மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுவும் நடப்பதில்லை. அதனால், வரும், 5ம் தேதி, வன எல்லை கிராம விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து, மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, கூறினர்.