உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலத்தில் இருந்து எண்ணெய் குழாயை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

நிலத்தில் இருந்து எண்ணெய் குழாயை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், சூலூர் விவசாயிகள் கொடுத்த மனு:கடந்த 1999ம் ஆண்டு, பெட்ரோநெட் -சி.சி.கே., நிறுவனம், எங்களது விவசாய நிலத்தில் கோவை முதல் கரூர் வரை, எண்ணெய்க் குழாய் திட்டத்தை அமைத்தது. இதனால், எங்கள் நிலம் துண்டாடப்பட்டு, நிலத்தின் சந்தை மதிப்பு சரிவடைந்துள்ளது.முழுமையாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. பொதுத்துறை வங்கிகள்கூட, நிலத்தை அடமானமாக வைத்து கடன் கொடுக்க மறுத்துவிடுகின்றன. நிலத்தை மட்டுமே நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2013, மார்ச் 24ல், தமிழக சட்டசபையில், 'திட்டத்துக்காக மக்கள் அல்ல; மக்களுக்காகத்தான் திட்டம்' என முன்மொழிந்து, தமிழகத்தில் எண்ணெய்-எரிவாயு குழாய் திட்டங்கள் அனைத்தும் சாலை ஓரமாக மட்டுமே அமல்படுத்தப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 340 கி.மீ., தூரத்துக்கு கெயில் எரிவாயு குழாய் திட்டமும், 270 கி.மீ., தூரத்துக்கு ஐ.டிபி.எல்., எண்ணெய் குழாய் திட்டமும், 170 கி.மீ., தூரத்துக்கு இந்தியன் ஆயில் எண்ணெய் குழாய் திட்டமும் சாலை ஓரமாக அமைக்கப்படுகிறது. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு முன், சாலை அமைத்துத் தருகிறோம் என வாக்குறுதி கொடுத்து எங்களை ஏமாற்றிய நிறுவனம், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல், பழைய அனுமதியையே வைத்துக் கொண்டு, போலீஸ் பாதுகாப்போடு, திட்டப்பணியை நிறைவேற்ற முயற்சி செய்கிறது.மேலும், 3வதாக ஒரு எண்ணெய்க் குழாயை அமைக்கவும் திட்டமிட்டு, மத்திய அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.எனவே, விவசாயிகளின் நலன் கருதி, 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, கோவை-கரூர் எண்ணெய் குழாயை தோண்டி எடுத்து, சாலை ஓரத்தில் அமைக்க வேண்டும். தற்போது அமைக்கப்பட்டு வரும் ஐ.டி.பி.எல்., திட்ட எண்ணெய்க் குழாயை, விவசாய நிலத்துக்குப் பதிலாக சாலை ஓரமாக பதிக்கவும், அடுத்த 3 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள குழாய் பதிக்கும் பணியையும் சாலை ஓரத்திலேயே மேற்கொள்ள வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பையும் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ