உடுமலை, - வனத்துறையின் குறை தீர் கூட்டத்துக்கு, அதிகாரிகள் யாரும் வராததால், அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து, திரும்பிச்சென்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ள கிராமங்களில், வனவிலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.இது போன்ற வனத்துறை சார்ந்த விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண, ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் சார்பில், குறிப்பிட்ட இடைவெளியில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.கடந்த கூட்டம், ஆனைமலை புலிகள் காப்பக, மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார்மீனா தலைமையில் நடந்தது. இதில், வன எல்லையில், சோலார் மின்வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விவசாயிகள் கொடுத்தனர்.இந்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, குறை தீர் கூட்டம், உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெறும் என நேற்று முன்தினம், வனத்துறை அலுவலர்களால், விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, உடுமலை குட்டைத்திடல் பகுதியிலுள்ள, வனச்சரகர் அலுவலகத்துக்கு, நேற்று காலை, 10:30 மணிக்கு, மனுவுடன், உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் வந்திருந்தனர்.ஆனால், அலுவலகத்தில் இருந்த பணியாளர்களுக்கே, கூட்டம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இருப்பினும், விவசாயிகள் வனத்துறை அதிகாரிகள் வருவதற்காக காத்திருந்தனர்.நீண்ட நேரமாகியும் குறை தீர் கூட்டம் நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து திரும்பிச்சென்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'வனத்துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாமல், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து மனு கொடுக்க நடத்தப்படும் கூட்டத்துக்கும் வனத்துறை அதிகாரிகள் வராதது வேதனையளிக்கிறது,' என்றனர்.வனத்துறை அதிகாரிகள் தரப்பில், தமிழக அரசு உத்தரவுப்படி, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ், கிராமங்களுக்கு ஆய்வுக்கு அதிகாரிகள் சென்றதால், கூட்டம் வேறொரு நாளில் நடத்தப்படும் என, தெரிவித்தனர்.