பெண் ஆசிரியர் சடலம் எரிந்த நிலையில் மீட்பு
போத்தனுார்:கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம் அடுத்துள்ள அரிசிபாளையம், ஆப்பிள் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி; வக்கீல். இவரது தாய் பத்மா, 53; வழுக்குப்பாறை அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி கோர்ட்டுக்கும், சகோதரர் லட்சுமி நாராயணன் கல்லுாரிக்கும் சென்றனர்.பத்மா, 11:00 மணிக்கு தன் ஸ்கூட்டரில், வெளியே சென்றார். மாலை வீடு திரும்பிய லட்சுமி நாராயணன், தாயின் மொபைல்போன், தங்க வளையல்கள், கழுத்து செயின் ஆகியவை, டேபிள் மேல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பத்மாவை தேடி பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு செல்லும் வழியில், சாவியுடன் நின்றிருந்த பத்மாவின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். இதுகுறித்து மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இந்நிலையில், நாச்சிபாளையம் - வழுக்குப்பாறை சாலையில், சபீகா என்பவருக்கு சொந்தமான தோட்டத்திலுள்ள காலியிடத்தில், பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்ட போலீசார், அது பத்மா என்பதை உறுதி செய்தனர்.போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.