காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க வேலி அமைப்பு
தொண்டாமுத்துார், ; கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்தில், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க, பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள், பறவை இனங்கள் உள்ளன. சில ஆண்டுகளாகவே காலமாற்றம், வழித்தடம் ஆக்கிரமிப்பு, உணவு தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால், காட்டு யானைகள், வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.இதையடுத்து, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க, பாதுகாப்பு வேலி அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, 'தொண்டாமுத்துார் பகுதியில், 7 கோடி ரூபாய் மதிப்பில் வன எல்லை பகுதியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்பின், 7 கோடி ரூபாய்க்கு பதிலாக, 5 கோடி ரூபாய் திட்டமாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில், கோவை வனச்சரகத்தில், அட்டுக்கல் முதல் பொம்மணம்பாளையம் வரையுள்ள 5 கி.மீ., தொலைவிற்கும்; போளுவாம்பட்டி வனச்சரகத்தில், அட்டுக்கல் பெரும்பள்ளம் முதல் தேவராயபுரம் வரையில் உள்ள 5 கி.மீ., தொலைவிற்கும் வேலி அமைக்கும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.பாதுகாப்பு வேலி அமைய உள்ள பகுதியில், வனத்துறையினரின் வாகனங்கள் சென்று வர வசதியாக, பொக்லைன் இயந்திரம் மூலம் வன எல்லையில், 6 மீட்டர் அகலத்திற்கு புதர்களை அகற்றி, சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பு வேலியை கடந்தாலும், இரண்டாவது தடுப்பாக அகழி உள்ளதால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின், காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக, 5 கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஜூன் இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். இத்திட்டம் வெற்றி பெற்றால், மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.