கண்கூசும் மின்விளக்குகள்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்!
வீணாகும் தண்ணீர்
பொள்ளாச்சி, ஜமீன் முத்தூர் அருகே ரோட்டின் ஓரத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி சேதமடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -விக்னேஷ், பொள்ளாச்சி. குழி மூடப்படுமா
பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியில் தோண்டப்பட்ட குழி மூடாமல் இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக குழியை மூட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -சிவகுமார், பொள்ளாச்சி. ரோடு அமைக்க தாமதம்
கிணத்துக்கடவு, அண்ணாநகரில் ரோடு சீரமைப்பு பணிக்காக, கடந்த, 20 நாட்களுக்கு முன் கற்கள் கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை ரோடு பணி முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து, ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.-- -சதீஷ், கிணத்துக்கடவு. புதர்களை அகற்றணும்!
கிணத்துக்கடவு, சோழனூரில் இருந்து பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை செல்லும் ரோட்டின் இரண்டு பகுதியிலும் செடிகள் முளைத்து புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோர புதரை அகற்ற வேண்டும்.- -ஜீவா, கோவில்பாளையம். சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி - உடுமலை சாலையில், கோமங்கலம்புதூர் அருகே ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரோட்டில் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் இதை கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.-- -கனகராஜ், கோமங்கலம்புதூர். மின்விளக்கால் கண் கூசுது!
பொள்ளாச்சி அடுத்துள்ள, நல்லுாரில் இருந்து, ஜமீன் ஊத்துக்குளி செல்லும் கிருஷ்ணா குளம் ரோட்டில், வாகன உடைப்பு நிறுவனம் உள்ளிட்ட தனியார் ஒர்க் ஷாப்களில், உயரமாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிர்கின்றன. ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு கண் கூசும் வகையில் இந்த விளக்குகள் உள்ளதால், தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.- ரவி, நல்லுார். இடையூறாக மின்கம்பங்கள்
உடுமலை எம்.பி., நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக நடுரோட்டில் மின்கம்பங்கள் காணப்படுகின்றன. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக், உடுமலை. பள்ளி முன் கழிவுகள்
உடுமலை ஏரிப்பாளையம் ரோட்டிலுள்ள அரசு பள்ளி வளாகத்தின் முன், குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகிறது. தொடர்ந்து பள்ளியையொட்டி கழிவுகள் கொட்டப்பட்டு, அப்பகுதி குப்பை கிடங்காகவே மாறிவிட்டது. தற்போது மழைபெய்தால் கழிவுகளில் மழைநீர் தேங்கி மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.- தியாகராஜ், உடுமலை. சிதிலமான பாதாள சாக்கடை மூடிகள்
உடுமலை வ.உ.சி., வீதி, பசுபதி வீதி உட்பட நகர வணிக வீதிகளில் உள்ள பாதாள சாக்கடை குழிகளின் மூடிகள் சிதிலமடைந்துள்ளது. தவிர, வாகனங்கள் அவற்றின் மீது ஏறினால் மூடிகள் ஆடுகின்றன. எந்த நேரத்திலும் மூடிகளால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமான நிலையில் உள்ளது.- ராஜேஷ், உடுமலை. இருள் சூழ்ந்த வீதி
பெரியகோட்டை, காந்திநகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. மாலை நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக வரும் சமயங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் தனியாக வெளியில் சென்றுவருவதற்கும் அச்சப்படுகின்றனர்.- மாரியம்மாள், பெரியகோட்டை. சுகாதாரமில்லாத சுகாதார வளாகம்
உடுமலை பைபாஸ் ரோட்டிலுள்ள சுகாதார வளாகம், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. துாய்மை இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், சுகாதார வளாகத்தின் கட்டடத்தின் மேற்கூரை சிதிலமடைந்து இருப்பதால் பாதுகாப்பில்லாமலும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- இலக்கியா, உடுமலை.