வனவிலங்குகளுக்கான உணவை வனத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும்
மேட்டுப்பாளையம்; வனவிலங்குகளுக்கு தேவையான உணவை, வனப்பகுதியிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:கோவை மாவட்டத்தில் வனவிலங்கு மனித மோதல், விவசாய பயிர்களை அழித்தல் என்பது தினசரி நடக்கிறது. விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் அதிக அளவில் சேதம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. பொதுமக்கள் அரசுக்கு மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருகிறார்கள். ஆனால் வனத்துறை நடவடிக்கை ஏதும் இல்லை.வனவிலங்கு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கு சிறு தொகை நஷ்ட ஈடு என்பது தீர்வாகாது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வனப்பகுதியில் சமநிலை பாதுகாக்க வேண்டும். வனவிலங்குகளின் பெருக்கம் அதிகரித்துவிட்டன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். வனவிலங்குகளுக்கு தேவையான உணவை, வனத்துறையினர் வனப்பகுதியிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க, அகழியை ஆழமாக தோண்ட வேண்டும். சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை கொல்வதற்கு விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் அனுமதிக்க வேண்டும். எனவே இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து, தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.