அன்னுார்:'தவறுக்கு வருந்துவோரின் பாவங்கள், பகவானின் கருணையால் நீங்கிவிடும்,' என பகவத் கீதை சொற்பொழிவில் தெரிவிக்கப்பட்டது.'ஹரே கிருஷ்ணா' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், 'கீதை காட்டும் பாதை, இன்றைய பகவத் கீதை' என்னும் தொடர் வகுப்பு நான்காவது வாரமாக நடந்தது.கோவை 'இஸ்கான்' அமைப்பின் துணைத் தலைவர் மது கோபால் தாஸ் பேசுகையில், மந்திரம் என்பதற்கு மனதை விடுவிப்பது என்பது பொருள். மன சஞ்சலம், சோர்வு, மன அழுத்தம், குழப்பம், தீய சிந்தனைகள், சண்டை, சச்சரவுகள், அனைத்திலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி 16 வார்த்தைகள் அடங்கிய ஹரே கிருஷ்ணா மந்திரத்திற்கு உள்ளது.'ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, என்னும் 16 வார்த்தைகள் கொண்ட மகா மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதால், மனம் தூய்மை அடையும். தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறுக்காக வருந்தினால், பகவான் கருணையால் அந்த பாவங்கள் நீங்கிவிடும், என்றார்.'ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறும்,' என நிர்வாகிகள் தெரிவித்தனர். கீதை வகுப்பில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.