பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தை சேர்ந்த, 18-24 வயதான இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும்போது, படிவம் 6 வழங்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் கடந்த டிச., மாதம் நடந்தது. பெறப்பட்ட படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில் பயன்படுத்துவதற்கான இறுதி வாக்காளர் பட்டியல், 22ம் தேதி வெளியிடப்படுகிறது.ஆனால், 18-24 வயதுள்ள இளைஞர்கள் பலரும் தங்களது பெயரை பட்டியலில் சேர்க்க ஆர்வம் காட்டாமல் இருப்பது தெரியவந்தது.அவர்களை அவசியம் சேர்க்க, கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இச்சூழலில், ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக, படிவம் 6 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கச் செல்லும்போது, கார்டுதாரர்களின் வீடுகளில், 18-24 வயதான இளைஞர்கள் இருக்கிறார்களா; அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும். பெயர் இல்லை என்றால், படிவம் 6 கொடுத்து பூர்த்தி செய்து பெற வேண்டும்.பூர்த்தி செய்த படிவத்தை திரும்ப பெற்று, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், 50 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட புதிய வாக்காளர்களை, இறுதி பட்டியலை வெளியிடுவதற்கு முன் சேர்ப்பதற்கு, கலெக்டர் கிராந்திகுமார் இம்முயற்சி மேற்கொண்டுள்ளார்.
எந்த வீதியில் யார்,யார்எங்களுக்கு தெரியும்!
ரேஷன்கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டால் போதும்; அனைத்து கார்டுதாரர்களுக்கும் உடனடியாக தகவல் சென்று விடும். ஒவ்வொரு வீதியிலும் எத்தனை வீடுகள் இருக்கின்றன; அங்கு யார், யார் வசிக்கின்றனர் என்கிற விபரம், எங்களுக்கு முழுமையாக தெரியும்.அதனால், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணிகளை, எங்கள் வாயிலாக செய்தால், தவறில்லாமல் இருக்கும். இதற்கென சிறப்பூதியம் வழங்கி, இப்பணியில் ஈடுபடுத்தினால், 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கலாம்' என்றார்.