மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச செஸ் பயிற்சி
கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச செஸ் விளையாட்டு பயிற்சி வகுப்பு நேற்று துவக்கப்பட்டது.கோவை மாநகராட்சி சார்பில், 148 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவியரின் கல்வித்திறன் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம், செஸ் பிஷப் அகாடமியுடன் இணைந்து ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் செஸ் பயிற்சி அளிக்க சிகரம் 64 என்கிற மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது.ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் வீதம் தேர்ந்தெடுத்து, 148 பேருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. முதல் இரண்டு மாதங்களில் மாணவர்கள் ஜூம் தளத்தில் வாரத்துக்கு ஒருமுறை நேரடி ஆன்லைன் பயிற்சியை பெறுவர். ஒவ்வொரு குழுவிலும், 15 மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்பர். இரண்டாம் கட்டத்தில் ஏ.ஐ., அடிப்படையில், ஒவ்வொரு மாணவரும் தனியாக ஒரு கம்ப்யூட்டரில் பயிற்சி மேற்கொள்வர். தமிழில் உரையாடல் வகுப்புகள் வழங்கி, மாணவர்களுக்கு தெளிவாக புரிந்து கொள்ள உதவும்; எளிதாக கற்றுக் கொள்வர்.இப்பயிற்சி வகுப்பு துவக்க விழா, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது. வகுப்பை துவக்கி வைத்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநில போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் குமரேசன், கல்விக்குழு தலைவர் மாலதி, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மாவட்ட ஒருங்கிணப்பாளர் காயத்ரி, செஸ் பிஷப் நிறுவன தலைவர் சூரியகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.