இலவசமாக தொழில்பயிற்சி இன்னும் 57 பேருக்கு இடம்
வால்பாறை: வால்பாறை மாணவர்கள் நலன் கருதி கடந்த, 2022-23ல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டது. பிட்டர், எலட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், கடந்த ஜூன் மாதம் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. மொத்தம் உள்ள, 104 இடங்களுக்கு, இது வரை 47 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் தலைமையில் ஊழியர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வால்பாறை அருகே நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கலந்து கொள்ள வந்த எஸ்டேட் தொழிலாளர்களிடம், தொழிற்பயிற்சி நிலைய ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கினர். அவர்கள் பேசுகையில், 'உங்கள் வீட்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய ஆண், பெண் பிள்ளைகளை, வால்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்துங்கள். அரசின் சார்பில் பஸ் பாஸ், சைக்கிள், இலவச பயிற்சி, உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் வழங்குகிறோம். உங்கள் குழந்தைகளின் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும் தொழிற்க்கல்வி மிகவும் பயனுள்ளதாக அமையும். வரும் 31ம் தேதி வரை வால்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது,' என்றனர்.