சித்திரைக்கனியை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு வந்த பழங்கள்
பொள்ளாச்சி, ; சித்திரைக்கனியை முன்னிட்டு, பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு மா, பலா, வெள்ளரி உள்ளிட்ட பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சித்திரக்கனி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, வீடுகளில், பழங்கள், பூக்கள் கொண்டு வழிபாடு செய்து அந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.வரும்,14ம் தேதி சித்திரக்கனி கொண்டாட்டத்துக்காக, காந்தி மார்க்கெட் மொத்த பழ மார்க்கெட்டுக்கு பழங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. கேரளா மாநிலத்தில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.வியாபாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது துவங்கியுள்ளது. கேரளாவில் இருந்தும் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வெயில் அதிகமாக உள்ள சூழலில், மாம்பழ விற்பனை மந்தமாக உள்ளது.மா விலை கடந்தாண்டு கிலோ, 70 - 80 ரூபாயாக இருந்தது. தற்போது, 40 - 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.கேரளாவில் இருந்து பலாப்பழமும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. கிலோ, 20 - 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளரி பழங்களும் கிலோ, 15 - 20 ரூபாயாக உள்ளது. அதேபோன்று, வாழைப்பழம் வரத்தும் அதிகம் உள்ளது. சித்திரைக்கனியை முன்னிட்டு விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, கூறினர்.