உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 20 வார்டுகளில் 60 வேலைகள் செய்வதற்கு...  நிதி ஒதுக்கீடு! சிறப்பு கூட்டங்களின் பரிந்துரைகள் ஏற்பு

20 வார்டுகளில் 60 வேலைகள் செய்வதற்கு...  நிதி ஒதுக்கீடு! சிறப்பு கூட்டங்களின் பரிந்துரைகள் ஏற்பு

கோவை;கோவை மாநகராட்சியில் நடத்தப்பட்ட சிறப்பு வார்டு கூட்டங்களில் பரிந்துரைத்த கோரிக்கைகளில், முதல்கட்டமாக, 20 வார்டுகளில், 60 வேலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடத்தி, முக்கியமான மூன்று கோரிக்கைகளை பரிந்துரைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில், அக். 27, 28, 29ம் தேதிகளில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் மட்டுமே கூட்டம் நடத்த அறிவுறுத்தியதால், பெரும்பாலான வார்டுகளில் சம்பிரதாயமாக நடத்தப்பட்டன. அதில், ரோடு மோசம், மழை நீர் வடிகால் இல்லை, தெருவிளக்கு எரியவில்லை, மழை பெய்தால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது என்பன உள்ளிட்ட அடிப்படை பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் முறையிட்டனர். இறுதியாக, அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் கேட்டு, தலா மூன்று கோரிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு, 'முதல்வரின் முகவரி' தளத்தில் பதிவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டசபை தேர்தலுக்கு முன் அப்பணிகளை செய்தால் மட்டுமே ஓட்டு கேட்டு மக்களை சந்திக்க முடியும் என கவுன்சிலர்கள், மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினர். இதையடுத்து, மாநகராட்சி பொது நிதியில், பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. மழை நீர் வடிகால் கட்டுவது, பூங்கா, விளையாட்டு மைதானம் மேம்படுத்துவது, பாதாள சாக்கடை தொட்டிகளை உயர்த்திக் கட்டுதல், சிறுபாலம் திரும்பக் கட்டுதல், போர்வெல் அமைத்தல், கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. முதல் கட்டமாக, 20 வார்டுகளில், 60 வேலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 4 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, நிர்வாக அனுமதி கோரி, மாமன்ற கூட்டத்துக்கு தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஒப்புதல் அளித்ததும் டெண்டர் கோரப்பட்டு, அடுத்த மாதம் ஜன., மாதத்துக்குள் பணிகள் செய்ய இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ