உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருகூர், சூலுார், ரயில்வே ஸ்டேஷன்களில் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

இருகூர், சூலுார், ரயில்வே ஸ்டேஷன்களில் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

சூலுார்; இருகூர், சூலுார், சோமனுார் ரயில்வே ஸ்டேஷன்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும், என்ற கோரிக்கைகளின் பலனாக, திட்ட அனுமதி கிடைத்துள்ளது.கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட அனைத்து நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், இருகூர், சூலுார், சோமனுார் ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்கின்றன. தினமும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள், இந்த ஸ்டேஷன்கள் வழியாக இயக்கப்படுகின்றன.இந்த மூன்று ஸ்டேஷன்களில் இருந்து, பாசஞ்சர் ரயில்களில், தினமும், ஏராளமான பயணிகள் பல ஊர்களுக்கு சென்று வருகின்றனர். குடிநீர், கழிப்பிடம், இருக்கைகள் முறையாக இல்லை. நடைமேடை தாழ்வாக உள்ளதால், ரயில் இருந்து இறங்கவும், ஏறவும் பலரும் சிரமப்படுகின்றனர். மேற்கூரை மற்றும் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல நடைபாதை மேம்பாலங்கள் பழுதடைந்துள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஸ்டேஷன் ஆலோசனை குழு ஆய்வு: சூலுார், சோமனுார் ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனை குழுவினர், இரு ஸ்டேஷன்களிலும் ஆய்வு செய்து, செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து பட்டியல் தயாரித்தனர். திருப்பூரில், ரயில்வே அதிகாரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூறுகையில், ''சோமனுார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து, ஸ்டேஷனுக்கு செல்ல தார் ரோடு போட வேண்டும். இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும். தொட்டிபாளையம், ராமாச்சியம்பாளையத்தில் ரயில் ரோட்டருகே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தடுப்புகள் அமைக்க வேண்டும். சோமனுார், சூலுார், இருகூர் ஸ்டேஷன்களில் அனைத்து பாசஞ்சர் ரயில்களையும் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமனுாரில் சரக்குகளை கையாளும் வகையில், சரக்கு ரயில்கள் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம்,'' என்றனர்.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'சோமனுார், சூலுார் ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்வே நடை மேம்பாலம் அமைக்கவும், சோமனுார், இருகூரில் புதிய நடைமேடை அமைக்கவும் அனுமதி கிடைத்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் மேம்பாட்டு பணிகள் துவங்கும். புதிய கோரிக்கைகளும் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி