உடுமலை : கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பிரதான கால்வாய் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை முழுமையாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலங்கள், 4 மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தொகுப்பு அணைகளில் நீர் சேகரித்து, காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.அதன் பின், திருமூர்த்தி அணையிலிருந்து, 124 கி.மீ., நீளம் அமைந்துள்ள பிரதான கால்வாய் வழியாக, பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.பாசன நிலங்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ள பிரதான கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில், தளம் மற்றும் பக்கவாட்டு கான்கிரீட் சுவர்கள் இடிந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது.பல இடங்களில் மண் கால்வாயாகவும் மாறி, நீர்க்கசிவு காரணமாக, நீர் இழப்பு அதிகரித்து வருகிறது.பாசனத்திற்கு நீர் வினியோகிக்கப்படும் போது, பல இடங்களில் திடீர் உடைப்பு ஏற்பட்டும் வருகிறது. பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதிகம் சேதம் அடைந்த, 5 இடங்களில், ஏறத்தாழ, 5.70 கி.மீ., துாரம் மட்டும், ரூ. 29.60 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்டது. இப்பகுதிகளில், தளம் மற்றும் பக்கவாட்டு கரைகள் முழுமையாக, கம்பி கட்டி, கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டது.மீதம் உள்ள, கால்வாய் பகுதிகளில், பக்கவாட்டு கரைகளிலுள்ள சிலாப்புகள் சிதைந்தும், சிமெண்ட் கரைகள் உடைந்தும் காணப்படுகிறது.மேலும், கிளைக்கால்வாய்களுக்கு நீர் பிரியும், மடைகள் உள்ள பகுதிகளில் கரைகள் உடைந்து, நீர்ப்பங்கீட்டிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் பெருமளவு வீணாகி வருகிறது.பருவ நிலை மாற்றம், மழை பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களினால், பாசன நீர் பற்றாக்குறை உள்ள நிலையில், சிதிலமடைந்து காணப்படும் பிரதான கால்வாய் காரணமாகவும், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.எனவே, பி.ஏ.பி., பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., பாசன நீரை ஆதாரமாகக்கொண்டு, பாசன பகுதிகளில், தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள் என பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது மழை பொழிவு குறைவு, பாசன கட்டமைப்புகள் சிதிலமடைந்து காணப்படுவது, நீர் நிர்வாக குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், பாசன திட்டம் முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளது.பருவ மழைகள் குறைவு காரணமாக, நிலைப்பயிர்களை காக்க, உயிர்த்தண்ணீர் மட்டும், குறைந்த காலத்திற்கு திறக்கப்படுகிறது.விவசாயிகளுக்கு மணி கணக்கில் நீர் வழங்குவதால், எந்த பயிர்களும் பாசனம் செய்ய முடியாமல், நிலத்தடி நீர் மட்டத்தை தற்காலிகமாக காப்பாற்ற மட்டும் பயன்படுகிறது.எனவே, இத்திட்டத்தில் நிலுவையிலுள்ள அணை திட்டங்கள், பிரதான கால்வாய் உள்ளிட்ட பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.