உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளிக்கு ஸ்வீட் எடு... கொண்டாடு! இனிப்பு பலகார கடைகளை மொய்த்த மக்கள்

தீபாவளிக்கு ஸ்வீட் எடு... கொண்டாடு! இனிப்பு பலகார கடைகளை மொய்த்த மக்கள்

கோவை ; தீபாவளியை முன்னிட்டு கடைகளில் இனிப்பு, காரம் வாங்க, பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.ஆண்டு முழுவதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும், தீபாவளி என்ற பெயரை சொன்னாலே முகத்தில் ஒரு சந்தோஷ கீற்று வந்து மறையும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தீபாவளிக்கான ஏற்பாடுகளில், 15 நாட்களுக்கு முன்னரே பெண்கள் தயாராகி விடுவர். மாவு அரைக்கும் ரைஸ் மில்களில், கூட்டம் நிரம்பி வழியும். இனிப்பு, கார வகைகளுக்கு தேவையான மாவு வகைகளை, பக்குவமாக தயாரித்து அதை தயார்படுத்துவர்.தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன், தெருவில் நடக்கும் போதே தெரிந்து விடும், ஒவ்வொரு வீட்டிலும் என்ன பலகாரம் தயாராகிறது என்று! லட்டு, ரவா லட்டு, பாதுஷா, ஜிலேபி, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அதிரசம், சோமாஸ், கோதுமை அல்வா என, அனைத்து இனிப்பு வகைகளும், அம்மா கைபக்குவத்தில் தயாராகி விடும். முறுக்கு, மிக்சர், தட்டை, காரா பூந்தி, ஓமப்பொடி ஆகிய கார வகைகளும், சமையல் அறையை அலங்கரிக்கும். வீட்டுக்கும், தெருவுக்குமாக ஓடித்திரியும் வாண்டுகள், அவ்வப்போது கிச்சனில் புகுந்து முறுக்கை எடுத்து நொறுக்கி பாக்கெட்டில் திணித்து மீண்டும் ஓடுவர்.வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு, கார வகைகளை, புத்தாடை உடுத்தி உறவு, அண்டை வீடுகளுக்கு கொடுத்து, புத்தாடையை காமிக்க காத்திருக்கும் இளசுகள். தீபாவளி அன்று கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் மாறாத காட்சிகள் இவை. இன்று இந்த நிகழ்வுகள் எல்லாம் கனாகாலங்களாகி விட்டன. இன்று, ரெடிமேட் இனிப்புகள் மட்டுமே, தீபாவளியை தித்திப்பாக மாற்றுகின்றன. ஒரு சில இனிப்பகங்கள் மட்டுமே, பாரம்பரியத்தை காத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப, ஒவ்வொரு தீபாவளிக்கும் புதிய, புதிய ஸ்வீட் ரகங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.இதற்கேற்ப இந்தாண்டும், இனிப்பகங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இனிப்புகளை வாங்கிச் சென்றனர். குறிப்பாக லட்டு, மைசூர்பாக், காஜுகட்லி, பால் இனிப்புகள் அதிகளவில் விற்பனையாகின. மிக்சர், காராபூந்தி, முறுக்கு, காராசேவ், காரா கடலை, சீவல் உள்ளிட்ட கார வகைகளின் விற்பனையும் படுஜோராக நடந்தது.அதிரசம், தேன்குழல், ரவா லட்டு, பாதுஷா உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகளும், அதிகளவில் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

குமார்
அக் 31, 2024 04:13

ஈ தான் மொய்க்கும்.


அப்பாவி
அக் 31, 2024 04:12

திண்டுக்கல் பெசல் நெய் உட்டு சுட்ட இனிப்பு வகைகள். சூப்பரா இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை