உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நல்ல எண்ணங்களே வாழ்வை மாற்றி மனிதனை மனிதனாக வாழ வைக்கும்! கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு

நல்ல எண்ணங்களே வாழ்வை மாற்றி மனிதனை மனிதனாக வாழ வைக்கும்! கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு

பொள்ளாச்சி: ''நல்ல எண்ணங்களே மனிதனை மனிதனாக வாழ வைக்கும்,'' என, பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரியில் நடந்த விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார். பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயரின், 80 ஆண்டு சேவை வாழ்க்கை விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. மனிதவள மாண்பு துறையின் செய்தி தொகுப்பும், கல்லுாரி தலைவரின் நேர்காணல் நுாலும் வெளியிடப்பட்டன. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் வரவேற்றார். கல்லுாரி முன்னாள் மாணவர் டாக்டர் ராமகிருஷ்ணன் பேசினார். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். கோவை தென்மாநில பஞ்சாலை சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், கோவை அரசு கல்லுாரியின் அரசியல் அறிவுத்துறை தலைவர் கனகராஜ், கல்லுாரியின் முன்னாள் துறை தலைவர் பத்மநாபன், தொழில், சமுதாயம், கல்வி என்ற தலைப்பில் பேசினர். கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது: விவேகானந்தரின் ஒரு சொல் கூட நம்மை மாற்றும் வல்லமை கொண்டது. அது நம்மை உயர்ந்த குறிக்கோளுடனும், அர்ப்பணிப்புடனும் வாழ வைக்கும். மனிதன் மகத்தானவன் என்பதை புரிந்து கொண்டு வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். பணம், பதவி, புகழ் ஆகியவை வந்து போகும். ஆனால், நல்ல எண்ணங்களே நம் வாழ்வை மாற்றி மனிதனை மனிதனாக வாழ வைக்கும். இந்திய இளைஞர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. நல்ல கல்வியை கொடுத்தால் அவர்கள் உலகையே மாற்றுவர். இந்த நுாற்றாண்டு சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ளும் துணிவை மாணவர்களுக்கு தருவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மேலும், அவரது மனைவி கருணாம்பாள் பெயரில் செயல்படும் அறக்கட்டளை குறித்து பேசினார். சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம், கல்லுாரி செயலர் பாலசுப்ரமணியம், குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர், பொருளாளர் சிவக்குமார், முன்னாள் துணை வேந்தர் சிவசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ