அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று சம்பளம்
கோவை; நிதி ஒதுக்கப்பட்டதால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 1,700 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, மாதந்தோறும், 31ம் தேதி ஊதியம் வழங்கப்படும்.இந்நிலையில், வீட்டு வாடகைப்படி மானியம் கிடைக்காததால், சம்பள பட்டியல் தராமல் நிறுத்தப்பட்டது. இதனால், ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல், கடும் நிதிச்சுமைக்கு ஆளானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மானியம் விடுவிக்கப்பட்டதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் கோமதி (இடைநிலை) கூறுகையில், ''மானியத்தை ஒதுக்க அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து அரசு இன்று(நேற்று) நிதியை ஒதுக்கியது. ''ஊதியம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊதியம் நாளை(இன்று) வழங்கப்படும்,'' என்றார்.