அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் எமிஸ் பணிக்கு ஆட்கள் தேவை; கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
கோவை : அரசு பள்ளிகளில் 'எமிஸ்' பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், வரும் கல்வியாண்டு முதல் தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.பள்ளிக் கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் முழுமையான தகவல்களை பதிவு செய்து பராமரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் திறன் வளர்ப்பு, தேர்ச்சி விகிதம்உட்பட அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.எமிஸ் பதிவேற்ற பணிகளை, நேரடியாக ஆசிரியர்கள் செய்வதால், கற்பித்தல் பணிகளில் தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் இதற்கென தனி பணியாளர்களை நியமித்து, எமிஸ் பணிகளை மேற்கொள்ள, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இருப்பினும், பல அரசு பள்ளிகளில், இன்னும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், எமிஸ் பணிகளால் கற்பித்தல் பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் குமுறி வருகின்றனர். இப்பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள், எமிஸ் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தாலும், சில பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களே காலியாக உள்ளன. எமிஸ் பணிகள் தொடர்ந்து ஆசிரியர்களின் மீது திணிக்கப்படுகின்றன. இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதால், வரும் கல்வியாண்டு முதலாவது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், எமிஸ் பணிகளை மேற் கொள்ள, தனியாக பணியாளர் நியமிக்க வேண்டும் என்கின்றனர், அப்பள்ளிகளின் ஆசிரியர்கள்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், பள்ளிக் கல்வித்துறையின் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றன. இதில், பணியிடங்களை பள்ளி நிர்வாகமே பூர்த்தி செய்கிறது. அந்த நியமனங்களை ஆய்வு செய்து, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளிக்கிறது. தனியார் பள்ளிகள் ஒழுங்காற்று சட்டத்திற்கிணங்க, வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.