| ADDED : டிச 05, 2025 08:38 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து அரசு பஸ் (வழித்தட எண் --- 13) ஜக்கார்பாளையத்துக்கு காலை, 9:35 மணிக்கும், மாலை,4:20 மணிக்கும் சென்று வருகின்றன. ஜக்கார்பாளையத்தில் உள்ள எம்.என்.எம். அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக உள்ளது. இந்நிலையில், பஸ் அடிக்கடி பழுதாகி நிற்பதால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில் இருந்து ஜக்கார்பாளையத்துக்கு இயக்கப்படும் பஸ், அடிக்கடி பழுதாகி பாதியிலேயே நிற்கிறது. இதனால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் அவ்வப்போது, பஸ் பழுதாகி நிற்கும் இடத்துக்கு சென்று மாற்று வாகனத்தில் மாணவர்களை அழைத்து வருவது தொடர்கதையாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை பஸ் பழுதாகி நின்றதால், மாணவர்களை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் வாகனத்தில் அழைத்துச் சென்று வீடுகளில் விட்டனர். நேற்று காலையும் பஸ் பழுதாகி நின்றதால் மாணவர்கள் சிரமப்பட்டனர். அடிக்கடி, 'மக்கர்' ஆகி நிற்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து, உள்ள நிலையில் உள்ள பஸ் இயக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மாணவர்கள் நலனுக்காக புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.