உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனைகள் தனியாரை விட சிறப்பு; கோவைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டு

அரசு மருத்துவமனைகள் தனியாரை விட சிறப்பு; கோவைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டு

கோவை : ''கோவை மாவட்டத்தில் மருத்துவ வசதிகள் சிறப்பாக இருக்கிறது. மேலும், ரூ.18.10 கோடிக்கு புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சிங்காநல்லுாரில் ரூ.1.50 கோடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாளியூரில் ரூ.58.10 லட்சத்தில் மேம்படுத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று திறந்து வைத்தார்.கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகம் வழங்கி, அமைச்சர் சுப்ரமணியன் பேசியதாவது:கோவை மாவட்டத்தில், 2.05 கோடியில் 8 துணை சுகாதார நிலையங்கள், ரூ.3.75 கோடியில் 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்ப்புற பொது சுகாதார ஆய்வு கூடங்கள், புறநோயாளிகள் பிரிவுகள், செவிலியர் குடியிருப்பு, கூடுதல் கட்டடங்கள் என பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில், 72 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அறிவிக்கப்பட்டன. கடந்தாண்டு, 49 மையங்கள் திறக்கப்பட்டன. இன்னும், 23 இடங்களில் கட்டுமான பணிகள் நிறைவுற்று, திறக்கப்பட உள்ளன.கோவை அரசு மருத்துவமனையில் ரூ.2.20 கோடியில் நீராவி சலவை வசதி, மருத்துவமனையில் இரண்டாவது தளம் கட்டப்படுகிறது. 34 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்படுகின்றன. மொத்தம், ரூ.18.10 கோடியில் புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோவையில் மருத்துவ கட்டடமைப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது.நீலாம்பூர், முதலிபாளையம், முத்துக்கவுண்டன்புதுார், அரசூர், தென்னம்பாளையமண், சோமனுார், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, 14 கி.மீ., துாரம் சூலுாருக்கு நடந்து சென்று, அங்குள்ள அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தேன்; ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர்.இதற்கு காரணம், தனியார் மருத்துவமனைகளை விட மருத்துவ கட்டமைப்பு அரசு மருத்துவமனையில் சிறப்பாக இருப்பதே. மருத்துவ வசதிகளை இன்னும் மேம்படுத்த பல்வேறு வசதிகள் செய்து வருகிறோம்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா வரவேற்றார். கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் லக்குமி இளஞ்செல்வி, தெய்வயானை, உதவி கமிஷனர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொ) பூபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி