பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் கூடுதல் பணிச்சுமை; தவறு நேரும் என அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அலர்ட்
கோவை; விடைத்தாள் திருத்தும் பணியில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபடமுடியாத நிலையில், அதிக பணிச்சுமை காரணமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாக, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.தமிழகத்தில், 2024--25ம் கல்வியாண்டுக்கான பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 3 முதல், 25ம் தேதி வரையும், பிளஸ்1 தேர்வு, 5 முதல், 27ம் தேதி வரையும் நடந்தது. மாவட்டத்தில், 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி பெண்கள் பள்ளியிலும், கோவை கல்வி மாவட்டத்தில் சர்வஜன பள்ளி, அவிலா பள்ளிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. 1,500 ஆசிரியர்கள், 2 லட்சத்துக்கு மேற்பட்ட விடைத்தாள்களை திருத்த உள்ளனர். இப்பணியில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ்2 செல்லும் மாணவர்களுக்கு தற்போது முதலே, பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது. இதனால், தங்கள் பணிச்சுமை அதிகரிக்கும் என்கின்றனர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். தவறு நடக்கும்
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான எண்ணிக்கையில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளில், பிளஸ்2 வகுப்பு பாடத்திட்டம், சிறப்பு வகுப்புகளாக நடத்தப்படுகிறது.இதனால் குறைந்த ஆசிரியர்களே, விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வரும் சூழல் உள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால், மதிப்பீட்டில் தவறுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது. எனவே, கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களும், மதிப்பீட்டு பணியில் முழுமையாக ஈடுபடுவதை, கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து கேட்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியை தொடர்பு கொண்டபோது மொபைல் அழைப்பை அவர் ஏற்கவில்லை.