உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எங்களுக்கு மட்டும் அரசு சலுகைகள் ஏன் கிடையாது? கிரில் தொழில்துறையினர் கேள்வி

எங்களுக்கு மட்டும் அரசு சலுகைகள் ஏன் கிடையாது? கிரில் தொழில்துறையினர் கேள்வி

கோவை: கிரில் பேப்ரிகேஷன் தொழில் மீது அரசு பாராமுகம் காட்டி வருகிறது. தேர்தலின்போது மட்டும் வாக்குறுதிகளைத் தரும் கட்சிகள், அதன்பிறகு அதுபற்றிப் பேசுவது கூட இல்லை என, கிரில் தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.கட்டுமானத் துறையின் முக்கியமான அங்கமாக விளங்குவது கிரில் தொழில். ஆறு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், நேரடியாக இத்துறையில் பணிபுரிந்து வந்தாலும், அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை என, இத்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, கோவை மாவட்ட கிரில் உற்பத்தியாளர்கள் நலச் சங்க (கோஜிம்வா) தலைவர் ரவி கூறியதாவது:ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி தொழிலாளர்கள், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்கள் கிரில் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.மின் கட்டண உயர்வு, நிலைக்கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டணம் ஆகியவை தொழிலில் பெரும் பிரச்னையாக உள்ளது. மின் கட்டணம் உற்பத்திச் செலவை பெருமளவு அதிகரிப்பதால், தொழில் தேக்கமடைகிறது.

இலவச மின்சாரம்

விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்கியதைப் போல, கிரில் தொழிலுக்கும் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகிறோம்.மற்ற தொழில்களைப் போல, உள்ளீட்டு வரியை எங்களால் வாங்க முடியாது. ஜி.எஸ்.டி.,யை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க முடியாது. உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் என இரு வகைகளிலும் எங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதனை 5 சதவீதமாக குறைத்தால், ஏற்றுக் கொள்வோம்.

கிரில் பார்க் என்னவானது

நகரம் விரிவடையும் நிலையில், நீண்ட காலத்துக்கு முன்பே, புறநகரில் இடம் வாங்கி, சிறிய அளவில் கிரில் தொழிற்சாலை அமைத்திருப்போம். அங்கு வீடுகள் கட்டி குடியிருப்புகள் அதிகமானதும், மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் தெரிவித்து, எங்களை வெளியேறச் சொல்கின்றனர்.சொந்தமாக இடம் வாங்கி, கடனுக்கு தொழில் நடத்துபவர் எப்படி வெளியேற முடியும். எனவே, கிரில் தொழிலுக்கு என தனியாக குறுந்தொழில் பேட்டை வேண்டும்.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில், கிரில் பார்க் அமைக்கப்படும் என, உத்தரவாதம் அளித்தது. அமைச்சர் ராஜாவும் லோக்சபா தேர்தலின்போது உறுதி கூறினார். எந்த நடவடிக்கையும் இல்லை.ஜுவல் பார்க் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டன. கிரில் பார்க் குறித்து அறிவிப்பு கூட வெளியாகவில்லை. 15 ஆண்டுகளாக எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை.பி.இ.பி. எனப்படும், முன்கூட்டி உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, ஸ்டீல் கட்டுமானங்களை உருவாக்கும், 'ப்ரீ இன்ஜினீயர்டு பில்டிங்' தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், கிரில் தொழிலுக்கு அரசு சலுகை அளித்தால், இத்துறை வேகமாக வளரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
செப் 22, 2025 16:56

கிரில் தொழிலாளிகள் தங்களுக்கென்ற தனி தொழிற்க்கூடம் கேட்பது நியாயமான கோரிக்கை. குடியிருப்பு பகுதிகளில் இந்த அபாயகரமான வேலைகள் செய்வது ஆபத்தானதே. வெல்டிங் வெளிச்சம் கண்களுக்கு கேடு விளைவிக்கும். கிரைண்டிங் பொறிகளும் கண்களுக்கு கேடு விளைவிக்கும். சத்தமாக விழும் சம்மட்டி அடி, காதுகளுக்கு கேடு விளைவிக்கும். வெல்டிங் மெஷின் பக்கத்துக்கு வீடுகளுக்கு வோல்ட்டேஜ் ட்ராப் ஏற்படும். அங்கே கீழே கிடக்கும் சிகிராப், பர் போன்றவை காலை பதம் பாக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை