உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமுகை வனத்தில் புல் செயல்விளக்கத் திடல்

சிறுமுகை வனத்தில் புல் செயல்விளக்கத் திடல்

மேட்டுப்பாளையம்; தமிழகத்தில் முதல் முறையாக சிறுமுகை வனப்பகுதியில் புற்கள் மேலாண்மை செயல் விளக்கத்திடல் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட புல் வகைகளை அடுத்த வாரம் முதல் நடவு செய்யப்படவுள்ளது. இதனால், உணவு தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவது தடுக்கப்படும்.தமிழக வனப்பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட புல் வகைகள் வளர்க்கின்றன. ஒவ்வொரு வனப்பகுதியிலும், அதன் நிலப்பரப்பு, சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு புல் வகைகள் மாறுபடுகின்றன.வனப்பகுதிகளில் பார்த்தீனியம், லண்டனா உள்ளிட்ட அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், வனப்பகுதிகளில் புல் வகைகள் வளரும் பரப்பளவு, குறைந்தது.புற்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் உணவு தேவை அதிகரித்தது. இதை பூர்த்தி செய்ய, தமிழக அரசின் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு கழக முகமை நிதியுதவியுடன், தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில், சுமார் 520 எக்டேர் அளவுக்கு புல் வகைகளை வளர்க்க முடிவு செய்யப்பட்டது.இதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட அத்திக்கடவு பகுதியில், 25 ஏக்கரில் புற்கள் நடப்பட்டன. இதனால் வனவலங்குகள் புற்கள் வளர்ந்த இடத்தை தனது வேட்டையாடும் பகுதியாகவும், ஓய்வு எடுக்கும் பகுதியாகவும், புற்களை உண்டும் பயன்படுத்தின. தற்போது மீண்டும் கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புற்கள் நடப்பட உள்ளன.இதற்காக சிறுமுகை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட புல் வகைகளை நடவு செய்து, புற்கள் வளர்வது தொடர்பாக அதற்கான தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளன.இதுகுறித்து, வனப்பொருட்கள் மற்றும் வன உயிரியல் துறையின் தலைவர் பரணிதரன் கூறியதாவது: சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டையில் 2 ஏக்கர் அளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட புல் வகைகளை அடுத்த வாரம் முதல் நடவு செய்ய உள்ளோம். புற்களில் எந்த வகை மிகவும் வேகமாக வளர்கிறது, வறட்சியை எந்த வகை புற்கள் தாங்கி வளர்கிறது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகத்தில் முதல் முறையாக, புற்கள் நடவு மேலாண்மை செய்ய உள்ளோம். இதற்காக செயற்விளக்க திடல் அமைக்கப்படுகிறது.இவ்வாறு வனப்பகுதியில் புற்களை நடுவதால், அந்நிய களைச்செடிகள், மீண்டும் அந்த இடத்தில் அதிகம் பரவுவது தடுக்கப்படும். வனவிலங்குகள் புல் வளர்ந்த இடத்தை தனது வேட்டையாடும் பகுதியாகவும், ஓய்வு எடுக்கும் பகுதியாகவும் பயன்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், ''புற்கள் நடுவதால் உணவு தேவைக்காக ஊருக்குள் வனவிலங்குகள் வருவது தடுக்கப்படும்.புல்லில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், கோடை காலத்தில் வனவிலங்குகளுக்கு தேவைப்படும் தண்ணீர் கிடைத்துவிடும். இதனால் தண்ணீரை தேடி வனவிலங்குகள் அதிகம் அலையாது. புற்களை உண்ண வரும் மான், காட்டெருமை, காட்டுப்பன்றிகள் போன்றவைகளை வேட்டையாட புலி, சிறுத்தை அங்கு வரும். இதனால் புற்கள் இருக்கும் இடத்தில் புலி, சிறுத்தை அதிகம் வாழும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ