உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்: நீர்வளத்துறை ஆய்வில் அதிர்ச்சி

அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்: நீர்வளத்துறை ஆய்வில் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில், 392 பிர்காக்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள தகவல், நீர்வளத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. நீர்வளத் துறையின் கீழ், மாநில நிலம் மற்றும் மேற்பரப்பு நீர்வள விபரக் குறிப்பு மையம் இயங்கி வருகிறது. இப்பிரிவு வாயிலாக, மாநிலம் முழுதும் நிலத்தடிநீர் மட்டம் மற்றும் நீரின் தரம் கண்டறியப்படுகிறது. மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள விபர குறிப்பு மைய தலைமை பொறியாளர் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சென்னை மண்டல இயக்குனர் இணைந்து, இந்த ஆய்வை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்கின்றனர். இதற்காக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, 'சாப்ட்வேர்' பயன்படுத்தப்படுகிறது. ஆய்வு முடிவுகள், டில்லியில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரிய தலைவர் தலைமையிலான நிபுணர் குழுவிற்கு அனுப்பபட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது. இதை தொடர்ந்து, நிலத்தடி நீர் மதிப்பீடு ஆய்வு அறிக்கை, நீர்வளத் துறையால் வெளியிடப்படுகிறது. அதன்படி, 2024ம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலம் முழுதும் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு அறிக்கையை, நீர்வளத் துறை செயலர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1,202 பிர்கா எனப்படும் குறுவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக நுகர்வு காரணமாக, 392 பிர்காக்களில், நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. மேலும், 56 பிர்காக்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான கட்டத்திலும், 239 பிர்காக்களில், மித அபாயகரமான கட்டத்திலும் உள்ளது. மயிலாடுதுறையில் 1, நாகப்பட்டினத்தில் 16, புதுக்கோட்டை 3, ராமநாதபுரம் 9, திருவாரூர் 4, திருவள்ளூர் 1 என, 34 பிர்காக்களில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள மற்றும் கடல்நீர் ஊடுருவல் அதிகரித்துள்ள பகுதிகளில், மழைநீர் சேமிப்பு திட்டம், செயற்கை நீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ