உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைத்ததால்...  மகிழ்ச்சி! நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது

பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைத்ததால்...  மகிழ்ச்சி! நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த, பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா (பாஸ்போர்ட் சேவை மையம்) தலைமை தபால் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும், 29ம் தேதி திறப்பு விழா நடத்த அதிகாரிகள் ஆயத்தமாகியுள்ளனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது.கோவை மாவட்டத்தில், இரண்டாவது பெரிய நகரமாகவும், லோக்சபா தொகுதியில் தலைமையகமாக பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் வசிக்கும் மக்கள், பாஸ்போர்ட் சேவைகளுக்காக கோவைக்கு செல்கின்றனர். வால்பாறையில் இருந்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செல்ல, நான்கு முதல், ஐந்து மணி நேரமாகிறது. இதனால், மக்கள் மிகுந்த அலைச்சலுக்கு ஆளாவதுடன், நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது.இதுபோன்று, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதி மக்கள், கோவைக்கு செல்ல நேரம் விரயமாகியது. எனவே, பொள்ளாச்சி பகுதியில், பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, பா.ஜ.வினர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பினர். அதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுப்பிய பதிலில், இந்தியாவில் பாஸ்போர்ட் சேவை மையம் இல்லாத ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் அமைக்க மத்திய தபால் துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தந்ததும் பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க வேண்டுமென, 'தினமலர்' நாளிதழிலும் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் தாக்கமாக, ஆழியாறு தபால் அலுவலகத்தில், பாஸ்போர்ட் கேந்த்ரா அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆழியாறு தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேந்த்ரா அமைத்தால், பொதுமக்களுக்கு பயன் இருக்காது. எனவே, பொள்ளாச்சி பகுதியிலேயே அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கிடையே, பொள்ளாச்சி தபால் அலுவலகத்திலேயே பாஸ்போர்ட் கேந்த்ரா அலுவலகம் திறக்க, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், தபால் துறையிடம் இடம் கேட்டனர். பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் பகுதியில் அமைக்க அதற்கான ஆயத்தப்பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அதிகாரிகள், தபால்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பாஸ்போர்ட் கேந்த்ரா, பொள்ளாச்சி தபால் அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்த நிலையில் வரும், 29ம் தேதி திறப்பு விழா நடக்கிறது. பொள்ளாச்சியில் அலுவலகம் துவங்கிய பின், பாஸ்போர்ட் புதுப்பித்தல், புதியதாக விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ