ராமகிருஷ்ணா மில் முன்னாள் ஊழியர்கள் சந்தித்து மகிழ்ச்சி
கோவை, ; கோவையில் பிரபலமான ஸ்ரீ ராமகிருஷ்ணா மில் ஊழியர்கள் சந்திப்பு, நேற்று நடந்தது. அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.கோவை சத்தியமங்கலம் சாலையிலுள்ள, பழமையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ், 1951ம் ஆண்டு துவங்கப்பட்டது, 2008ம் ஆண்டு மூடப்பட்டது.இந்த காலகட்டத்தில், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றனர். மில் மூடப்பட்டதால், பலரும் பணியிலிருந்து விடுவித்துக்கொண்டனர்.இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின், அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நவ இந்தியாவிலுள்ள எஸ்.என்.ஆர்., அரங்கத்தில், நேற்று மாலை நடந்த இந்நிகழ்ச்சியில், 52 வயதிலிருந்து, 90 வயது வரை உள்ள, 480 முன்னாள் மில் ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.மில் ஊழியர்களாக பணிபுரிந்த போது, நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் மாலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ராமகிருஷ்ணா மில் நிர்வாக இயக்குனர் லட்சுமிநாராயணசாமி குடும்பத்துடன் பங்கேற்றார்.என்.எல்.ஓ., தொழிற்சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.