ஓணம் பண்டிகைக்காக செண்டுமல்லி பூ அறுவடை
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வடிவேலாம்பாளையம், மோளப்பாளையம், மங்கலபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில், செண்டுமல்லி, கோழிக்கொண்டை, வாடாமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்படும். இங்கிருந்து, ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்துக்கு, பூக்கள் அறுவடை செய்து அனுப்பப்படும். இந்தாண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டன. 5ம் தேதி, ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், தற்போது பூக்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டு, வயநாடு நிலச்சரிவு காரணமாக, கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடவில்லை. இந்தாண்டு கொண்டாடுவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ செண்டுமல்லி, 80 ரூபாய்க்கும், வாடாமல்லி, 100 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை, 100 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. நல்ல லாபம் கிடைப்பதால், பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.