உயர்ரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி; பொதுமக்களே ஜாக்கிரதை...
கோவை : உயர்ரத்த அழுத்தம் என்பது அமைதியான கொலையாளி. இதனை உடல் நல பிரச்னையாக நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 18 முதல் 54 வயதுடைய இந்தியர்களில், 30 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் பரிசோதிப்பதில்லை என, புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக உயர் ரத்த அழுத்த தினம் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடந்தது. இதில், காலையில் பேரணியும், தொடர்ந்து மருத்துவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு விளக்க கருத்தரங்கும், மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. டீன் நிர்மலா தலைமைவகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.டீன் நிர்மலா கூறியதாவது:உயர் ரத்த அழுத்தம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மே 17ம் தேதி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக இருப்பதை, உயர் ரத்த அழுத்தம் என்று கூறுகின்றோம்.உலகளவில் அதிக இறப்புகளுக்கு, இந்நோய் முக்கிய காரணமாகவுள்ளது. பொதுவாக உயர் ரத்த அழுத்தத்தை நாம் தீவிர உடல் நல பிரச்னையாக எடுத்துக்கொள்வதில்லை. முறையாக பரிசோதிக்காமல் விட்டால், பல்வேறு இணை நோய்கள் ஏற்படும்.ஐ.சி.எம்.ஆர்., ஆய்வறிக்கையின் படி, இந்தியர்கள் உயர் ரத்த அழுத்தத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை என தெரியவந்துள்ளது. 18 வயது முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்கள், 30 சதவீத இந்தியர்கள் உயர் ரத்த அழுத்த பரிசோதிப்பதில்லை. அதாவது, 10ல் மூன்று பேர் பரிசோதிப்பதில்லை.முன்பெல்லாம் ரத்த அழுத்தம், 50-60 வயதில் வரும். தற்போது பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு கூட வருவதை காண்கிறோம். உடல் பருமன், இளம் வயதினரிடையே அதிக மனஅழுத்தம், துாக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகம் உள்ள உணவு அதிகம் எடுப்பது, இதற்கு முக்கிய காரணம். சர்க்கரை நோயை விட, உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கின்றது.பலர் இதற்கு மருத்துவ சிகிச்சை எடுப்பது இல்லை. மருத்துவர்கள் ஆலோசனை படி தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். இதன் காரணமாகவே, இருதயவியல் துறைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும், முதலில் உயர் ரத்த அழுத்த பரிசோதனை, கட்டாயமாக மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்வில், இருதயவியல் துறைத்தலைவர் நம்பிராஜன், மருத்துவ மாணவர்கள், பயிற்சி செவிலியர்கள் பங்கேற்றனர்.
என்னென்ன பாதிப்பு?
''கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பின், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், மூளையில் அடைப்பு, சிறுநீரக நோய் மற்றும் செயலிழப்பு, பார்வை இழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், பெரிய அபாயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, உடல் பருமன் குறைத்தல், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் தவிர்ப்பது, மன அழுத்தத்தை நிர்வகிப்பதன் வாயிலாக, ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்,'' என்றார் இருதயவியல் துறைத்தலைவர் டாக்டர் நம்பிராஜன்.
இன்று முதல் தரைத்தளத்துக்கு மாற்றம்
இருதய நோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பார்கள். கோவை அரசு மருத்துவமனையில், இருதயவியல் சிகிச்சை பிரிவு, நான்காவது தளத்தில் இருந்தது. அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய, இந்நோயின் தன்மை கருதி, இன்று முதல் இருதய வெளிநோயாளிகள் பிரிவு, தரைத்தளத்துக்கு மாற்றப்படுகிறது.