கோவையில் உயர்ரக போதை காளான் பறிமுதல்: 5 பேர் கைது
தொண்டாமுத்தூர் ; கோவை மாவட்டம், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, நரசீபுரம் பகுதியில், கஞ்சா கொண்டு செல்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, எஸ்.ஐ., கவியரசு தலைமையிலான போலீசார், நரசீபுரத்தில் வாகன சோதனை செய்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த நரசீபுரத்தை சேர்ந்த சரவணகுமார்,26, பிரசாந்த்,30 ஆகியோரை பிடித்து, சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, அவர்களிடமிருந்து, 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், தீனம்பாளையத்தில் உள்ள அறையில் தங்கியுள்ளவர்களிடம் அதிகளவு, போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக, தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த, 589 கிராம் போதை காளான், 1 கிலோ உயர்ரக கஞ்சா, 13 கிலோ குட்கா, 4 பைக்குகள், 6 மொபைல்போன்கள், ஒரு பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த, பி.என்.புதூரை சேர்ந்த அமரன்,30, கர்நாடகாவை சேர்ந்த ஜெகனாதன், சதீஷ்,31, சாய்பாபா காலனியை சேர்ந்த நிஷாந்த், 23, உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.இதுகுறித்து எஸ்.பி., கார்த்திகேயன், நிருபர்களிடம் கூறுகையில்,தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், சோதனை நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட, 5 பேரும், கல்லூரி நண்பர்கள். இவர்கள், வெளிநாடுகளில் இருந்து, டார்க் வெப்சைட்யில், போதை காளான், உயர்ரக கஞ்சாவை கொரியர் மூலம் பெற்று, இங்கு சிறிது சிறிதாக பிரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,என்றார்.