ஹிந்தி பேசும் குழந்தைகளும் இனி தமிழ் பேசும்: விரிவடையும் தமிழ் கற்றல் மையங்கள்
கோவை: கோவையில் பேரூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், வடமாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள் அதிகளவில் கல்வி கற்கின்றனர். இக்குழந்தைகள் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் சிரமப்படுவதால் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிற்றல் ஏற்படுவதை தடுக்க, 'தமிழ் மொழி கற்போம்' என்ற திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தமிழ் மொழியின் அடிப்படை எழுத்து உள்ளிட்ட மொழி திறன்கள் கற்றுத்தரப்படுகின்றன. ஒரு வட்டாரத்தில் சராசரியாக, 20க்கும் மேற்பட்ட வெளிமாநிலக் குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். தற்போது, தொண்டாமுத்தூர் மற்றும் முத்திப்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, அன்னூர் கெம்பநாயக்கன்பாளையம் பள்ளி உள்ளிட்ட இடங்களில் இந்த மையங்கள் செயல் படுகின்றன. இதனுடன், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 63 மாணவர்களுக்கு 3 தன்னார் வலர்கள், புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 29 மாணவர்கள், வடிவேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் 34 மாணவர்கள் என மொத்தம் 126 மாணவர்களுக்கு 5 தன்னார்வலர்கள் மூலம், தமிழ் மொழி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தன்னார்வலர்கள் எளிய வழியில் கற்பிக்கக்கூடிய வகையில், மாணவர்களின் தாய்மொழிகளில் விளக்கங்களுடன் கூடிய, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறையினர் கூறுகையில், 'இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெறும் வெளிமாநிலக் குழந்தைகள் அடிப்படை தமிழ் அறிவு பெற்றவுடன், அவர்கள் வழக்கமான வகுப்புகளுடன் இணைக்கப்படுவர். அதுவரை, இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து தமிழ் மொழி கற்றுத்தரப்படும்,' என்றனர்.