உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருக பக்தருக்கு அடிப்படை வசதி; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

முருக பக்தருக்கு அடிப்படை வசதி; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

'அறுபடை வீடு முருகன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு, தமிழக அரசு தேவையான அடிப்படை வசதியை செய்து தர வேண்டும்,' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.தைப்பூச திருவிழா வரும் 11ல் முருகன் கோவில்களில் நடக்கிறது. பழநி உட்பட முக்கிய கோவில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியிருப்பதாவது: தைப்பூச திருவிழாவுக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தவும், லட்சக்கணக்கானோர் அறுபடை வீடுகளுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தனி வழி அமைத்தும், ஒளிரும் குச்சியை (ரிப்ளக்டர் ஸ்டிக்) வழங்க வேண்டும். ஆனால், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை கூட செய்து தருவதில்லை என்பது மனிதாபிமானமற்ற செயல்.பழநியில் பாதயாத்திரை சென்று திரும்பும் பக்தர்களுக்கு, இலவச பஸ் வசதி செய்வதாக தற்போது தகவல் வெளியே வந்துள்ளது. அதனை முழுமையாக பயனடையும் வகையில் செய்ய வேண்டும். அதை விடுத்து கண்துடைப்பாக நாடகமாக செய்ய வேண்டாம்.பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்குவதை தடை செய்துள்ளதைக் கண்டிக்கிறோம். நல்ல எண்ணத்துடன் தருபவர்களை, சட்டத்தை காட்டி மிரட்டுவது சரியான செயலில்லை. மக்களுக்கு சேவை செய்ய வருபவர்களை தடுப்பது கூடாது.வரும் காலங்களில் நடைபெற இருக்கின்ற தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆன்மிக விழாக்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக தமிழக அரசு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை