உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ம்ம்ம்....வளர்ச்சிப்பணிகள் வேகமா நடக்கட்டும்! மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கறார் உத்தரவு

ம்ம்ம்....வளர்ச்சிப்பணிகள் வேகமா நடக்கட்டும்! மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கறார் உத்தரவு

கோவை: கோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கிராந்தி குமார், அவிநாசி ரோடு மேம்பாலம், செம்மொழி பூங்கா மற்றும் நுாலகப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, 'இனியும் தொய்வு கூடாது; பணிகளை வேகப்படுத்துங்கள்' என, அறிவுரை வழங்கினார்.கோவையில் அவிநாசி ரோடு மேம்பாலப் பணி, தொய்வாக நடந்து வருகிறது. மார்ச் மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நவ இந்தியா, ஹோப் காலேஜ் ரயில்வே மேம்பால பகுதியில் ஓடுதளம் அமைக்காததால் தாமதமானது.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

இதேபோல், செம்மொழி பூங்கா பணிகளை ஜூன் மாதத்துக்குள், நுாலகப் பணியை, 2026 ஜன., மாதத்துக்குள் முடிக்கவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்விரு வேலைகளும் விறுவிறுப்பாக நடந்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவதற்கு, சாத்தியமில்லாத சூழல் காணப்படுகிறது.அதனால், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட, முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் நேற்று, ஒவ்வொரு இடத்துக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், விளக்கம் கேட்டார். செம்மொழி பூங்கா பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கினார்.அதற்கு, 'அரிய வகை மரங்கள் நடுங்கள். வேளாண் பல்கலையுடன் இணைந்து நர்சரி உருவாக்குங்கள். மாநகராட்சியில் தோட்டக்கலை பிரிவை ஏற்படுத்துங்கள்' என, கண்காணிப்பு அதிகாரி அறிவுரை வழங்கினார்.

அதிகாரிகளிடம் கறார்

பூங்கா வளாகத்தில் நட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதையும், 'ஸ்கேடா' தொழில்நுட்பத்தில் கண்காணிப்பையும் பார்வையிட்ட அவர், தொய்வு ஏற்படாமல் குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க, கறாராக அறிவுறுத்தினார். அவிநாசி ரோடு மேம்பாலப் பணிகளில், நவ இந்தியா பகுதியில், மின் ஒயர் குறுக்கே சென்றதால், ஓடுதளம் அமைப்பது தடைபட்டு இருந்தது. அந்த வேலை என்னவானது என, கண்காணிப்பு அதிகாரி கேள்வி எழுப்பினார்.மின் புதை வடமாக மாற்றி, ஓடுதளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டிருக்கிறது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே அனுமதி கிடைத்து விட்டது; வேலைக்கு எந்த இடைஞ்சலும் இல்லை; ஜூன் இறுதிக்குள், 10.1 கி.மீ., துார ஓடுதள பாதை பணியை முழுமையாக முடிப்பதாக, மாநில நெடுஞ் சாலைத்துறையினர் உறுதி கூறியுள்ளனர்.

கொண்டு செல்லப்படும்'

மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கிராந்திகுமார் கூறியதாவது:மாவட்ட அளவில் திட்டங்கள் செயல்பாடு, வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலை குறித்து, கண்காணிப்பு அதிகாரிகளுடன், தலைமை செயலரும், அரசு செயலர்களும் ஆய்வு செய்வர். அதற்கு முன்னதாக, மாவட்டத்தில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன; அவற்றுக்கு அரசின் ஒத்துழைப்பு தேவையா என ஆய்வு செய்யப்படும். பணிகளின் முன்னேற்றம், திட்டங்களில் எத்தகைய மாறுதல் தேவை, கூடுதல் நிதி தொடர்பாக பரிந்துரைக்கப்படும். அனைத்து துறை அலுவலர்களின் கருத்து கேட்டறியப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !