உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எச்.எம்.பி.வி., தொற்று: அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு

எச்.எம்.பி.வி., தொற்று: அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு

மேட்டுப்பாளையம்; எச்.எம்.பி.வி.,வைரஸ் தொற்று தொடர்பாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் எச்.எம்.பி.வி., என்ற 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' தொற்று 3 மற்றும் 8 மாத குழந்தைகள் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஐ.சி.எம்.ஆர். உறுதி செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு., நான்கு படுக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:-எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. சளி, காய்ச்சல், இருமல் போன்றவைகள் இதன் அறிகுறிகளாக தற்போது சொல்லப்படுகிறது.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் எச்.எம்.பி.வி., மட்டுமல்ல அனைத்து வகையான தொற்று நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருந்துக்கள் கையிருப்பில் உள்ளன. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. சளி, காய்ச்சலுக்கு தானாக மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். கண்டிப்பாக மருத்துவர்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.காரமடை வட்டார சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை பொதுவான அறிகுறிகள். பாதிக்கப்படுவோர், மூன்று முதல் ஆறு நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொண்டால் நல்லது. கொரோனா தொற்றுக்கு பின்பற்றிய அதே வழிமுறைகள் தான் இதில் பின்பற்ற வேண்டும். யாரும் அச்சப்பட வேண்டாம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை