ஓட்டல் ஊழியர் கொலை விவகாரம்: திண்டுக்கல் விரைந்த போலீசார்
கோவை; ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்தனர். கோவை உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்தவர் பாபு. இவர் அதே பகுதியில், ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடியை சேர்ந்த நவீன், 40 என்பவர் பணிபுரிந்தார். இவரும், ஓட்டலில் பணிபுரியும் திண்டுக்கல் தாடிக்கொம்பு, ஆவாரம்பட்டியை சேர்ந்த தயாநிதி, 42 என்பவரும் ஒன்றாக அறையில் தங்கியிருந்தனர். இரவு மது அருந்தும்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், காஸ் பர்னரை எடுத்து வீசியதில், நவீன் உயிரிழந்தார். கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிந்து, தயாநிதியை தேடி வந்தனர். தனிப்படை போலீசார், தலைமறைவான தயாநிதியை, அவர் உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில், திண்டுக்கல் விரைந்துள்ளனர்.