உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஓட்டல் கழிவு நீரால் வன விலங்குகளுக்கு. ஆபத்து! சோக் பிட் அமைக்குமாறு எச்சரிக்கை

 ஓட்டல் கழிவு நீரால் வன விலங்குகளுக்கு. ஆபத்து! சோக் பிட் அமைக்குமாறு எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஓடந்துறையில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், வனத்துக்குள் பாய்வதால், இதை அருந்தும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகின்றனர் வனத்துறையினர். மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட(ஓடந்துறை ஊராட்சி) அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படுகிறது. இதனை மான், காட்டுப்பன்றி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிப்பதால், அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வணிக நிறுவனங்களின் கழிவுநீர் வடிகாலில், அனைத்து விதமான கழிவு நீரும் விடப்படுகிறது. இதற்கு சுத்திகரிப்பு நிலையம் கிடையாது. மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைப்பும் கிடையாது. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், நேரடியாக வனத்துக்குள் விடப்படுகிறது. அதை வன விலங்குகள் குடிப்பதால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஒருமுறை வடிகாலை மண் கொண்டு அடைத்தோம். இதனால் ஊட்டி சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்' என்றார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்தரனிடம் கேட்டதற்கு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், கழிவு நீரை நேரடியாக வடிகாலில் விடக்கூடாது; சுத்திகரிப்பு செய்து தான் வெளியேற்ற வேண்டும் என, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

'சோக் பிட்' அமைக்க அறிவுறுத்தல்

கோவை மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன் கூறுகையில், கழிவுநீரை வெளியேற்றாமல் இருக்க கடைகள், விடுதிகள், வணிக வளாகங்களில் தனிப்பட்ட முறையில் ஒரு மாதத்துக்குள் 'சோக் பிட்' அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். பல கடைகள் அல்லது வணிக வளாகங்கள் ஒன்று சேர்ந்து அமைத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ