உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உன் சட்டையை கழற்றி விடுவேன்! எஸ்.ஐ.,யை மிரட்டிய தி.மு.க., நிர்வாகி

உன் சட்டையை கழற்றி விடுவேன்! எஸ்.ஐ.,யை மிரட்டிய தி.மு.க., நிர்வாகி

கோவை:உக்கடம் எஸ்.ஐ.,யை, ஒருவழிப்பாதையில் விதிமீறி வந்த தி.மு.க., நிர்வாகிகள், 'சட்டையை கழற்றி விடுவேன்' என, மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசார பயணத்தை, கோவையில் இரு நாட்கள் நடத்தினார். அதற்கான பிளக்ஸ் பேனர்கள், நகரில் பல்வேறு இடங்களில் இருந்தன. டவுன்ஹால் மணிக்கூண்டு முன் அரசியல் கட்சியினர் வழக்கமாக பிளக்ஸ் வைக்கும் இடத்தில், தி.மு.க., சார்பில், ஏற்கனவே பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல், அதற்கு முன், அ.தி.மு.க., பிளக்ஸ் வைக்கப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது.கோட்டைமேடு பகுதியில் இருந்து, பகுதி செயலர் பக்ருதீன், வார்டு செயலர் அப்பாஸ் உள்ளிட்ட தி.மு.க.,வினர், சங்கமேஸ்வரர் கோவில் வழியாக மணிக்கூண்டுக்கு, ஒரு வழிப்பாதையில் வந்தனர். உக்கடம் எஸ்.ஐ., அஜய் சர்மா, அவ்விடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். ஒருவழிப்பாதையில் வந்த வாகனங்களை நிறுத்திய அவர், 'போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரித்தார்.ஆவேசப்பட்ட தி.மு.க.,வினர், 'அனுமதியின்றி அ.தி.மு.க.,வினர் வைத்த பிளக்ஸ் பேனரை எடுக்கவில்லை' எனக்கூறி, டவுன்ஹாலில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க., நிர்வாகி கோட்டை அப்பாஸ், 'அ.தி.மு.க.,வினர் பேனர் வச்சிருக்காங்க; கழற்ற சொன்னா, கழற்ற மாட்டேங்கிறீங்க. நாங்கள் என்ன பைத்தியக்காரனா... நீ ரவுடியா... தொலைச்சுபுடுவேன்... உன் சட்டையை கழற்றிடுவேன்...' என, மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ, தற்போது வெளியாகி, அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீருடையில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., ஒருவருக்கு, பொதுவெளியில் அடாவடியாக தி.மு.க., நிர்வாகிகள் மிரட்டல் விடுத்திருப்பது, போலீசார் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை