ஐ.சி.ஏ.ஆர்., தென்மண்டல விளையாட்டு போட்டிகள் துவக்கம்; 1,000 வீரர்கள் களம்
கோவை; கோவையில் துவங்கிய ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டு போட்டியில் ஏழு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 1,000 பேர் களம் இறங்கியுள்ளனர்.கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக(ஐ.சி.ஏ.ஆர்.,) தென் மண்டல விளையாட்டு போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கின.வரும், 11ல் நிறைவடைகின்றன. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டில்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த, 1,000 பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குனர் கோவிந்தராஜ், எஸ்.பி.ஐ., துணைப்பொது மேலாளர்(கோவை) ஹரிஹரன் சிவராமசுப்ரமணியம் ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர்.ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், கேரள மாநிலம், காசர்கோடு சி.பி.சி.ஆர்.ஐ., நிறுவனத்தை சேர்ந்த அனீஸ், ஹைதராபாத் ஐ.ஐ.எம்.ஆர்., நிறுவன அமசித்தா, டெல்லி ஐ.ஏ.ஆர்.ஐ., நிறுவன பவன் சவுத்ரி ஆகியோர், முதல் மூன்று இடங்களை வென்றனர்.பெண்களுக்கான போட்டியில், கொச்சி சி.ஐ.எப்.டி., நிறுவன ஜெயா ஜெயந்தி, பெங்களூரு என்.ஐ.வி.இ.டி.ஐ., நிறுவன ஆச்சல் தல்வர், ஹைதராபாத் சி.ஆர்.ஐ.டி.ஏ., வைசாகுமாரி ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.குண்டு எறிதல் ஆண்கள் பிரிவில், பெங்களூரு என்.ஐ.வி.இ.டி.ஐ., நிறுவன அபிசேக் தோமர், கொச்சி சி.எம்.எப்.ஆர்.ஐ., நிறுவன எடிசன், ஆந்திராவின் ஐ.ஐ.ஓ.பி.ஆர்., நிறுவன திலீப்குமார் ஆகியோர், முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், பெங்களூரு ஐ.ஐ. எச்.ஆர்., நிறுவனத்தின் வெங்கடலட்சுமி, கர்நாடகா டி.சி.ஆர்., நிறுவனத்தின் பாக்யா, கொச்சி சி.ஐ.எப்.டி., நிறுவனத்தின் பிரினிதா ஆகியோர், முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.