உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடும் நடவடிக்கை என எச்சரிக்கை பழுக்க வைத்தால்...! 16 டன் மாம்பழங்கள் அழிப்பு

கடும் நடவடிக்கை என எச்சரிக்கை பழுக்க வைத்தால்...! 16 டன் மாம்பழங்கள் அழிப்பு

கோவை;ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட, ரூ.12.91 லட்சம் மதிப்புள்ள 16 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி - 1, பவள வீதி - 2, கருப்ப கவுண்டர் வீதி, கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் ஏழு குழுவாக மொத்தம், 14 பேர் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் என மொத்தம், 55 கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், 15 குடோன்கள் மற்றும், 16 மொத்த விற்பனை கடைகளில் சிறிய ரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.தொடர்ந்து ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார், 16,107 கிலோ மற்றும், 100 கிலோ அழுகிய ஆப்பிள் என மொத்தம், 16,207 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதனை மாநகராட்சி குப்பைகிடங்கில் உள்ள உரம் தயாரிக்க வைக்கப்பட்டுள்ள கிடங்கில் கொட்டி அழிக்கபட்டது.உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, சுமார் ரூ.12.91 லட்சம். மாம்பழம் மற்றும் ஆப்பிள் பறிமுதல் செய்யப்பட்ட, 21 மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் நோட்டிஸ் வழங்கப்பட உள்ளது. இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது,” என்றார்.இதுகுறித்து கலெக்டர் கிராந்தி குமார் கூறியதாவது:கார்பைட் கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்னைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்புள்ளது.உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்புள்ளது. எனவே ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். குறைபாடுகளை கண்டறிந்தால், 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை