உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழ்வாதாரம் காக்க தீர்வு கேட்டால் போங்க...போங்க என விரட்டுவதா? அதிகாரிகளுடன் மீனவப்பெண்கள் வாக்குவாதம்

வாழ்வாதாரம் காக்க தீர்வு கேட்டால் போங்க...போங்க என விரட்டுவதா? அதிகாரிகளுடன் மீனவப்பெண்கள் வாக்குவாதம்

கோவை; உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட்டை உடனடியாக காலி செய்ய, மாநகராட்சி அறிவுறுத்தியிருப்பதால், தரைக்கடை நடத்தி வந்த மீனவ பெண்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.உக்கடத்தில் துாய்மை பணியாளர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டியிருப்பதால், சில்லறை மீன் மார்க்கெட் வளாகத்தை, இடிக்க வேண்டியிருக்கிறது.புல்லுக்காடு மைதானத்தில், புதிய மார்க்கெட் திறக்கப்பட்டு உள்ளதால், இக்கடைகளை இன்று (5ம் தேதி) காலி செய்ய மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.கடைகளை அகற்றியதும், மார்க்கெட் வளாகம் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம், அவ்விடம் ஒப்படைக்கப்படுகிறது. கடைகளை காலி செய்யச் சொன்னதால், தரைக்கடை நடத்தி வந்த, 30 மீனவ பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் இன்னும் வழங்கவில்லை.கோவை மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள், மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில், மனு கொடுத்தனர். அப்போது, 'மீன் மார்க்கெட் தொடர்பாக ஒரு வருஷமாக பேச்சு நடந்து வருகிறது. இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள்' என, கமிஷனர் கேள்வி எழுப்பியதால், மீனவ பெண்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் கூறுகையில், 'வாழ்வாதாரமே போய் விடும்; மாற்று இடம் ஒதுக்கிக் கொடுங்கள் என, பலமுறை கூறி விட்டோம். முந்தைய மேயரிடமும் மனு கொடுத்திருக்கிறோம்; இப்போதுள்ள மேயரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது, இவ்வளவு நாட்களாக என்ன செய்தீர்கள் என எங்களையே கேட்கிறார்கள்' என, கண்ணீரோடு புலம்பினர்.அப்போது, மனுவை பெற்றுக் கொண்டதும், 'போங்க... போங்க...' என, கமிஷனர் கூறியதால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பிரச்னையை உணர்ந்த கமிஷனர், மீனவ பெண்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தி, விரைந்து தீர்வு காண அறிவுறுத்தினார். தெற்கு மண்டல அலுவலகத்தில் பேச்சு நடத்தப்பட்டது.அப்போது, 'புல்லுக்காடு மைதானத்தில் மாற்று இடம் ஒதுக்கித் தருகிறோம்; இடத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள். அங்கு தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து கொள்ளுங்கள்' என, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை