குடியரசு தின தடகள போட்டிகள் துவக்கம்; பதக்கம் வெல்ல மாணவ, மாணவியர் தீவிரம்
கோவை : பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு தின தடகள போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.சொக்கம்புதுார் எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி நடத்தும் இப்போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த் துவக்கிவைத்தார். இதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 2,000 பேர் பங்கேற்றுள்ளனர்.இதில், 19 வயதுக்குட்ட பெண்களுக்கான, 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஹூமைதா பேகம், ரஞ்சிதா, தேவிகா ஆகியோரும், ஆண்கள் பிரிவில் கே.ஆகாஷ், எம்.எஸ்.ஆகாஷ், தர்சன் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மேலும், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, 400 மீ., ஓட்டத்தில் ஹர்சினி, தர்சினி, பிலஸ்சி ஆகியோரும், ஆண்கள் பிரிவில், ஸ்ரீ சுபேசா மூர்த்தி, நிகிலேஷ், அருள் பாபி ஆபிரகாம் ஆகியோரும், முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்.நீளம் தாண்டுதல், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் லாவண்யா, சஸ்திகா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். உயரம் தாண்டுதல், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அக்சரா, பரணி, சாதனா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.அதேபோல், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதல் ஆண்கள் பிரிவில், மரியா எபினேஷ், அகில், ஜெயகார்த்தி ஆகியோரும், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.போட்டிகள் இன்று நிறைவடையும் நிலையில் மாணவ, மாணவியர் வெற்றி முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.