உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தக்காளி செடியில் நோய் தாக்குதல் அதிகரிப்பு; கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அட்வைஸ்

தக்காளி செடியில் நோய் தாக்குதல் அதிகரிப்பு; கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அட்வைஸ்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், தக்காளி செடியில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தை பொறுத்தவரை தென்னைக்கு அடுத்தபடியாக, தக்காளி சாகுபடி அதிக பரப்பில் உள்ளது. ஆண்டு தோறும், 400 ஹெக்டேர் அளவு வரை தக்காளி பயிரிடப்படுகிறது.கிணத்துக்கடவு பகுதியில், ஐந்து ரக தக்காளி பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ரகத்துக்கும் ஏற்ப, 90 நாள் முதல், 130 நாட்கள் வரை அறுவடை காலம் நீள்கிறது. சாகுபடி காலத்தில், 60 - 75வது நாளில், தக்காளி பறிப்பு துவங்குகிறது.ெஹக்டேருக்கு, 30 டன் வரை தக்காளி விளைச்சல் உள்ளது. ஒரு ஆண்டில், 25 - 30 ஆயிரம் டன் தக்காளி விளைச்சல் உள்ளதாக, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கடந்த ஒருவாரமாக, தக்காளி வரத்து அதிகரித்தும், விலை சற்று உயர்ந்தும் வருகிறது. ஆனால், சில விளைநிலங்களில் தக்காளி செடியில் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதை சரி செய்ய பல்வேறு மருந்து மற்றும் உரத்தை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால், செடிகள் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ள மருந்து மற்றும் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும், என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தக்காளி சாகுபடியில், ஊசிக்காய் துளைப்பான், புரோடினியா புழு, பச்சை காய்ப்புழு, இலைத்துளைப்பான், இலைப்பேன், சிவப்பு சிலந்தி உள்ளிட்ட பூச்சிகள் தாக்குகிறது. இதை தவிர்க்க, அசாடிராக்டின், பேசிலஸ் துர்ஜியான்சிஸ், எமாமெக்டின் பேன்ஜோட், ஸ்பைனோசேட், ப்ரோபர்கிட் உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகளை தோட்டக்கலை துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் படி தெளிக்க வேண்டும்.மேலும், தக்காளி செடியில், இலைக்கருகல், செப்டோரியா இலைப்புள்ளி மற்றும் பாக்டீரியா போன்ற நோய்கள் தாக்குகிறது. இதை கட்டுப்படுத்த, மேன்கோசெப், பைரக்லோஸ்ட்ரோபின், காப்பர் ஆக்ஸிகுளோரைடு, புலாக்ஸி தைராக்சைடு, ஸ்டெரப்ட்டோ சைக்கிளின் உள்ளிட்ட பூஞ்சானக் கொல்லிகளை பரிந்துரைப்படி தெளிக்க வேண்டும் என, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு நஷ்டம்!

பனப்பட்டி விவசாயி வேலுச்சாமி கூறுகையில், ''ஒரு ஏக்கருக்கு, 100 பெட்டி தக்காளி (15 கிலோ) வரை விளைச்சல் இருக்கும். ஆனால், பனிப்பொழிவு, இலை மஞ்சள் நிறமாக இருத்தல் மற்றும் சிவப்பு பூச்சி பாதிப்பு இருப்பதால், செடியின் இலை மற்றும் தக்காளியில் ஓட்டை விழுகிறது. மேலும், 100 செடியில் குறைந்தது, 20 செடி நோய் பாதிப்பு காணப்படுகிறது. இதற்கு மருந்துகள் தெளித்தாலும் ஓரளவு மட்டுமே கட்டுப்படுகிறது. நோய் தாக்குதல் ஏற்பட்ட செடிகளில் காய்ப்பு இருப்பதில்லை. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி