மேலும் செய்திகள்
வீடுகளை சேதப்படுத்திய யானைகள்
13-Aug-2025
வால்பாறை; வால்பாறையில், யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால், எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், அதிகளவில் யானைகள் உள்ளன. யானைகள் ஆண்டாண்டு காலமாக நடந்து செல்லும் வழியை மறித்து தேயிலை, காபி, ஏலம், மிளகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில், சமீப காலமாக யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கேரள மாநில எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், பருவமழைக்கு பின் நுாற்றுக்கணக்கான யானைகள் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுவதால் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு கூட்டமாக வரும் யானைகள், அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்கின்றன. எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளையும் யானைகள் இடித்த சேதப்படுத்தி வருகின்றன. இதனால், தொழிலாளர்களின் வீடு மற்றும் கடைகள் சேதமடைவதோடு, மனித உயிர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. யானைகள் நடமாட்டத்தால் எஸ்டேட் தொழிலாளர்கள் விடிய, விடிய துாங்கமின்றி யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. தொழிலாளர்கள் கூறியதாவது: தொழிலாளர் குடியிருப்பில் மாலை நேரத்தில் சிறுத்தை, கரடியும், இரவு நேரத்தில் யானைகளும் முகாமிடுகின்றன. இதனால், குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை நீடித்து வருகிறது. வனவிலங்கு - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தொழிலாளர் வசிக்கும் குடியிருப்பை சுற்றிலும் வேலி அமைத்து, வனத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, கூறினர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க, அதற்கு பிடித்தமான வாழை, கொய்யா, பலா போன்றவைகளை பயிரிடுவதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும். யானைக்கு பிடித்தமான ரேஷன் அரிசியை, மூட்டை கட்டி வீடுகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பை சுற்றியுள்ள புதரை அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். இனி வரும் காலங்களிலும் வனவிலங்குகளுடன் மனிதர்கள் இசைந்து வாழ கற்றுக்கொள்வது மிக அவசியம். இவ்வாறு, கூறினர்.
13-Aug-2025