பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
வால்பாறை; வால்பாறையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நகராட்சி அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு கடந்த, 2019ம் ஆண்டு ஜன.,1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலையும், நீர்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க அரசு களம் இறங்கியுள்ளது.இதற்கு மாற்றாக காகிதப்பை, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.ஆரம்பத்தில், கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பைகளை வழங்கி நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனால், சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:கோடை விடுமுறையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். ஆழியாறு சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணியர் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்கின்றனர்.இதே போல், வால்பாறையிலிருந்து சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் சின்கோனா சோதனைச்சாவடியிலும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். வால்பாறை நகரில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கினால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியும்.இவ்வாறு, கூறினர்.நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்ட போது,''பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால், அபராதம் விதிக்கப்படும்.உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பைகளில் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். இது குறித்து, நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.