10ம் வகுப்பில் சலுகை கோரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மாற்றுத்திறன் தேர்வர்களின் சலுகை விண்ணப்பங்கள் ஆய்வு
கோவை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறன் தேர்வர்களில் சலுகை கோரிய படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதில், சில விண்ணப்பங்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் 'ஸ்கி ரைப்' முறையில் தேர்வெழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் கோரி சமர்ப்பிக்கப்படும் படிவங்களை, வட்டார வாரியாக பிரித்து ஆய்வு செய்து, தகுதியான படிவங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்திற்குப் பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 350 மாணவர்களும், பத்தாம் வகுப்பில் 700க்கும் அதிகமான மாணவர்களும் சொல்வதை எழுதுபவர், ஏதேனும் ஒரு மொழிப்பாடத்தில் இருந்து விலக்கு, கூடுதலாக 1 மணி நேரம், எழுத்துப்பிழைக்கு மதிப்பெண் குறைக்கக்கூடாது, கால்குலேட்டர் பயன்படுத்துவது போன்ற அறிவுசார் குறைபாடு பிரிவில் சலுகை கோரியுள்ளனர். பேரூர், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், காரமடை உள்ளிட்ட 15 வட்டாரங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சலுகை கோரியுள்ள மாணவர்களை விட, பத்தாம் வகுப்புத் தேர்வுக்குச் சலுகை கோரியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் எனத் தெரிகிறது. அதிலும், மெடிக்கல் போர்டு அறிவுசார் குறைபாடு பிரிவில் பரிந்துரைகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கூறுகையில், ''மாற்றுத்திறன் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குச் சலுகை கோரிய படிவங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. எந்தப் படிவங்களும் நிராகரிக்கப்படவில்லை. எனினும், மருத்துவர் குழு பரிந்துரைத்த காலம் முடிவடைந்திருப்பது போன்ற சில காரணங்களால், அவை அந்தந்த பள்ளிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களுடன் மீண்டும் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாற்றுத்திறன் மாணவர்களின் படிவங்கள் சரிபார்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.
தயக்கம் காட்டும் பள்ளிகள்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சிக்காக சில தனியார் பள்ளிகள், அறிவுசார் குறைபாடு பிரிவில் வகுப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவ சான்று பெற அறிவுறுத்துகின்றனர். இதனால், 10ம் வகுப்பில் சலுகை கோரும் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு சலுகை பெற்று தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் அப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அம்மாணவர்களை சேர்க்க பள்ளிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அச்சான்று குறிப்பிட்ட காலம் மட்டுமே செல்லுபடியாகும். தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தாகியுள்ளதால், அவ்வாறு சான்று பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வுக்கு மருத்துவச் சான்று பெறும்போது கேள்வி எழ வாய்ப்பு உள்ளதால், பிளஸ் 1 வகுப்பிலும் மருத்துவச் சான்று பெற அறிவுறுத்துகின்றனர். உரிய மாற்றுத்திறன் சான்று வைத்துள்ளவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை. இதனால், பொதுத்தேர்வில் 'ஸ்கிரைப்' முறையில் அந்தந்த பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்காமல், பிற பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, கல்வியா ளர்கள் வலியுறுத்துகின்றனர்.